You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒடிஷா அரசியலில் சர்ச்சையாகி வரும் தமிழர் - யார் இந்த வி.கே. பாண்டியன்?
ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பரப்புரையில் கூறி வருகிறார். பிரதமர் திடீரென ஏன் இவ்வாறு பேசுகிறார் என்று பலரும் வியந்துள்ளனர்.
ஒடிஷாவின் பூரி தொகுதியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சமிட் பத்ரா போட்டியிடுகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், மோதியின் பக்தர் ஜெகந்நாதர் என்று கூறியிருந்தார். இது கடவுளை அவமானப்படுத்தும் செயல் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையாகவே, மோதி ஜெகந்நாதரின் பக்தர் என்று கூற வந்ததாகவும் அதை தவறாக மாற்றி கூறிவிட்டதாகவும் தெரிவித்தார் சமிட் பத்ரா. எனினும் அவரது கூற்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த பின்னணியில் தான், பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நவீன் பட்நாயக்கின் நெருக்கமானவராக பார்க்கப்படுபவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வி கார்த்திகேய பாண்டியன். அவர் தமிழ்நாட்டில் மதுரையை சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ் அதிகாரியானபோது ஒடிசாவில் பணி நியமனம் பெற்று அங்கு சென்றார். ஒடிஷாவின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர் முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்தைப் பெற்றார்.
பின் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார். முதல்வருடன் நெருக்கமாக வலம் வரும் அவர், திருமணம் செய்து கொள்ளாத நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக வளர்க்கப்படுகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரதமர் மோதி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களை திருடர்கள் போல் சித்தரிப்பது சரியல்ல என்றார். இரண்டு கட்டத் தேர்தல்களில் ஒடிஷாவில் முடிவடைந்துள்ள நிலையில், அமித் ஷா தனது தேர்தல் பரப்புரையில், ஒரு தமிழர் ஒடிஷாவை ஆளலாமா என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோதிக்கு ஜெகந்நாதர் கோயிலின் சாவி எங்குள்ளது என்று தெரிந்துக் கொள்ள அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர் அதை கண்டுபிடித்து ஒடிஷா மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கார்த்திகேய பாண்டியன் தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)