இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து, 'பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை 2019' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று, அந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் பி.வி. சிந்து (புசர்ல வெங்கட சிந்து).
இந்த விருதை வென்றது குறித்து கருத்துத் தெரிவித்த சிந்து, "இந்த விருதை வென்றது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பிபிசியின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கான விழாக் குழுவினரை நான் பாராட்டுகிறேன். இத்தகைய சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்ட பிபிசி இந்தியாவுக்கும், எனது ரசிகர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்", என்று தெரிவித்தார்.
பி.வி சிந்து, இதுவரை ஐந்து உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் சிந்துதான்.