You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக பொதுக்குழு - உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?
ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - என்ன நடந்தது?
வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுகவில் பிறர் கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை - தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்
அதிமுகவில் பிறர் கூட்டங்களை நடத்த அனுமதி இல்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள 9 பக்க புகார் கடிதத்தில், அதிமுகவில் கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளரான தானும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஒப்புதல் அளிக்காமல் எந்த கூட்டமும் நடத்தப்படக் கூடாது. ஆனால், அதையும் மீறி கடந்த 14ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்போது பொருளாளர் என்ற முறையில் தாம் கட்சியின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு - உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனு
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனுஅதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த, அதிமுகவின் கட்சி பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எவரேனும் மேல்முறையீடு செய்தால், அதில், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். தாக்கல் செய்த கேவியட் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது
Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்தனர்.
ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர் என்று ஆல்ட் நியூஸின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "2020இல் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரை கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை," என்று கூறியுள்ளார்.
முகமது ஜுபைர் உண்மை சரிபார்ப்பு இணையதளமான Alt News இன் இணை நிறுவனர்களில் ஒருவர். கடந்த சில வருடங்களாக போலிச் செய்திகள் தொடர்பான தகவல்களை ஆதாரங்களுடன் தமது தளத்தில் அவர் பகிர்ந்து வந்தார்.
கடந்த மே மாதம், மூன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு மக்கள் கவனத்தை ஈர்த்த இந்து மத தலைவர்கள் - யதி நரசிங்கானந்த், மஹந்த் பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப் ஆகியோரை 'வெறுக்கத்தக்கவர்கள்' என்று ஜுபைர் குறிப்பிட்டு ஒரு இடுகையை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்து உணர்வுகளை சீர்குலைத்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் ஜுபைர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஜுபைர் குறிப்பிட்டிருந்த இந்துத் தலைவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டுதல் மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியவர்களாக கருதப்பட்டுவர்கள். அதில் ஒருவரான யதி நரசிங்கானந்தா வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியிருந்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, நடிகர் பூ ராமு காலமானார்
வீதி நாடக்கலைஞரும் சினிமா நடிகருமான பூ ராமு, மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் உயிரிழந்தார்.
இயக்குநர் சசியின் பூ திரைப்படம் மூலம் பெரிதும் அறியப்படுவதால் தன் பெயருக்கு முன் பூ சேர்த்துக்கொண்ட இவர், தங்கமீன்கள், நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், இன்று உயிரிழந்தார். இவருக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
அதிமுக சிக்கலைத் தீர்க்க எம்.ஜி.ஆரின் உயில் உதவுமா?
எம்.ஜிஆர். இறப்புக்குப் பிறகு, அதிமுகவில் பிளவு வந்தபோது அதைத் தவிர்க்கும் விதமாகவும் தீர்க்கும் வழியாகவும் எம்.ஜி.ஆர் எழுதி வைத்த உயில் பார்க்கப்பட்டது. அதே உயில் மூலம் இப்போதும் அதிமுகவின் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமா? விரிவான தகவல்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் படியுங்கள்.
வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஆண் சிங்கம் ஒன்று இன்று உயிரிழந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்காவில், 2,300க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு 2000ஆவது ஜூன் 18ல் கள்ளக்குறிச்சியில் உள்ள, சிறிய உயிரியல் பூங்காவில் இருந்து மீட்கப்பட்டு, ‛மணி’ என்ற, ஆண் சிங்கம் கொண்டு வரப்பட்டது. தற்போது 32 வயதான அந்த சிங்கம், கடந்த சில நாட்களாக, வயது முதிர்வு காரணமாக, நோய் வாய்ப்பட்டு சரிவர உணவு உட்கொள்ளாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று அந்த சிங்கம் உயிரிழந்தது. கடந்தாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மே.,21ல் சிவா, ஜூன் 3ல் நீலா, ஜூன் 16ல் பத்மநாபன், அக்10ல் கவிதா ஆகிய சிங்கங்கள் இறந்திருந்தன.
இந்தாண்டு, ஜன 15ல் விஷ்ணு இன்று மணி ஆகிய சிங்கங்கள் இறந்துள்ளன. இதனால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இதுவரை இறந்துள்ள சிங்கங்களின் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா எதிர்கட்சிகள் ஆதரவு தலைவர்களுடன் வேட்பு மனு தாக்கல்
இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வான யஷ்வந்த் சின்ஹா இன்று தேர்தல் பொறுப்பு அதிகாரியான மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் அறையில் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ராஷ்ட்ரிய லோக் தளத்தின் ஜெயந்த் சின்ஹா, தெலங்கானா அமைச்சரும் டிஆர்எஸ் தலைவருமான கே.டி.ராமராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
16 எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக 84 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இரண்டு முக்கிய எதிர்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை வேட்புமனு தாக்கலுக்கு அனுப்பவில்லை.
வந்துகொண்டிருக்கும் செய்தி, மகாராஷ்டிராவில் தகுதி நீக்க நோட்டீஸுக்கு பதில் தர ஆளும் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கூடுதல் அவகாசம் - உச்ச நீதிமன்றம்
மகாராஷ்டிராவில் ஆளும் முதல்வருக்கு எதிராகத் திரும்பிய முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை துணை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய அளித்த நோட்டீசுக்கு ஜூலை 11ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, இன்று மாலைக்குள் பதில் தாக்கல் செய்ய துணை சபாநாயகர் அவகாசம் அளித்திருந்தார்.
மகாராஷ்டிரா நெருக்கடி: இதுவரை என்ன நடந்தது?
ஆளும் சிவசேனை முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் 15 அதிருப்தி உறுப்பினர்களுக்கு எதிராக துணை சபாநாயகர் நர்ஹரி ஷிர்வால் சமீபத்தில் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் நாடினர்.
ஏக்நாத் ஷிண்டே தாக்கல் செய்த மனுவில், மகாராஷ்டிராவில் 55 சிவசேனா எம்எல்ஏக்களில் 38 பேர் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் உகந்த அரசியல் சூழ்நிலை நிலவாததால் உச்ச நீதிமன்றத்தை நாடியதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பிய துணை சபாநாயகர், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற செயலாளர், மத்திய அரசு மற்றும் பிறருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
39 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினவியபோது, ஏற்கெனவே போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்எல்ஏக்களின் உயிருக்கும், சுதந்திரத்துக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்தார். அதை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, அதை இப்போது வெளியிட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு புதிய இடத்தை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெறும்.
இம்முறை வேறு இடத்தில் பொதுக்குழுவை நடத்த அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்தி, பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய்பாபுவிடம் கேரள போலீஸ் விசாரணை
மலையாள சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரிடம் கேரள போலீஸார் திங்கள்கிழமை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பான விவகாரத்தில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பிறகு விஜய் பாபு எர்ணாகுளம் டவுன் தெற்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இதனால், கைதான விஜய் பாபுவை போலீசார் விரைவில் விடுவிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
திரைப்பட வேடங்கள் தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியதாக நடிகை ஒருவர் விஜய் பாபுவுக்கு எதிராக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் மனுவை வழங்கியபோது, கேரள உயர்நீதிமன்றம் அவரை மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவரது கடவுச்சீட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விஜய் பாபுவை விசாரணைக் குழு விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தன் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகையின் அடையாளத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்கள் மூலம் விஜய் பாபு வெளிப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில்தான் அவர் மீது சம்பந்தப்பட்ட நடிகை பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதன்பேரில் விஜய் பாபு மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கடந்த ஏப்ரல் மாத இறுதியில் விஜய் பாபு துபாய் சென்றார்.
39 நாட்கள் வெளிநாட்டில் இருந்த விஜய் பாபு ஜூன் 1ஆம் தேதி கொச்சி திரும்பிய பிறகு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில், அவரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்த நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார்.
நித்யானந்தா ஆசிரமத்தில் போலீஸ் சோதனை: மகளை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் புகார்
தனது மகளை நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து மீட்டு தரக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நித்யானந்தாவுக்கு பல ஏக்கர் பரப்பளவில் ஆசிரமம் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் சாலையில் உள்ள ஆர். ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ நாகேஷ் ஓய்வுபெற்ற பொறியாளர். இவரது மனைவி மாலா இவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு வைஷ்ணவி மற்றும் வர்தினி(22) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் நால்வரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இணைந்து உள்ளனர்.
பின்னர் அங்கு பிடிக்காமல் நாகேஷ் அவரது மனைவி மற்றும் அவரது பெரிய மகள் வைஷ்ணவி ஆகியோர் பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். இதில் வர்தினி மட்டும் பெங்களூரில் உள்ள நித்யானந்தரின் பிடதி ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
சில வாரங்களாக தந்தை நாகேஷ் அங்கே சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பும்படி கேட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூர் ஆசிரமத்தில் இருந்து வர்தினியை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு அனுப்பி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் ஆய்வாளர் ஹேமமாலினி தலைமையில் போலீசார் இரவு நித்தி ஆசிரமத்திற்குள் நுழைந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நித்தி ஆசிரமத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததை அறிந்த கிரிவலம் சென்ற பக்தர்கள் நித்தி ஆசிரமம் முன்பு குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய தேடுதலில் வர்தினி திருவண்ணாமலையில் இல்லை என ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி சதி - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்
மகராஷ்ட்ராவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மகராஷ்ட்ராவில் சிவசேனா எம்.எல்.ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனியாக பிரிந்துள்ளனர். அவர்களின் அமைச்சர் பதவி பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவசேனா எம்.பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத்த்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது குறித்து சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த சம்மன் எதற்காக அனுப்பி வைத்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நல்லது. மகராஷ்ட்ராவில் பெரிய அரசியல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் மிகப் பெரிய யுத்தத்தில் உள்ளோம். என்னைத் தடுக்க நடக்கும் சதி. நான் கவுகாத்தி வழியை பின்பற்ற மாட்டேன்.' என்று தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடி கரையில் மயங்கிய நிலையில் இருந்த இலங்கை தம்பதி மீட்பு
இலங்கை பொருளாதார நெருக்கடியால் வாழ வழியின்றி சட்டவிரோதமாக படகு மூலம் தனுஸ்கோடி வந்த வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவரை மரைன் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இன்று காலை தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரை பகுதியில் வயது முதிர்ந்த தம்பதி கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள்; ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராமேஸ்வரம் மரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் காவலர்கள் கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் சுயநினைவு இன்றி கிடந்த இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்ட அவசரஊர்தி வாகனம், தம்பதி இருந்த கடற்கரைக்கு அருகே வர இயலவில்லை. இதையடுத்து அந்த தம்பதியை மீட்க இந்திய கடலோர காவல் படையின் உதவி கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல் கோதண்டராமர் கடற்கரைக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் கடலோர காவல் படை வீரர்கள் மயக்க நிலையில் இருந்த இலங்கை தம்பதியை மீட்டு ராமேஸ்வரம் அடுத்துள்ள இரட்டை தாளை கடற்கரைப்பகுதி வைத்து இருவரையும் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட இருவருக்கும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவருக்கும் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களிடம் மரைன் போலீசார் நடத்திய விசாரணையில்; இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் (82) அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரிய வந்தது.
சிவன் மன்னாரில் கூலி வேலை செய்து வருவதாகவும், இவர்களுக்கு 3 பெண்கள், ஒரு மகன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை எரிபொருள் நெருக்கடி: மருத்துவனைக்கு செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே பிரசவம்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத நிலையில், கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது.நிகவரெட்டிய பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.சிசேரியன் சத்திர சிகிச்சைக்கு தேதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேதிக்கு முன்னரே குறித்த பெண்ணிற்கு குழந்தை பேற்றுக்கான வலி வந்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் நிகவரெட்டிய - திவுல்லேகொட பிரதேச குடும்ப சுகாதார சேவை அதிகாரிக்கு, உறவினர்கள் அதிகாலை வேளையில் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளனர். ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ, டாக்சி கிடைக்கவில்லை.இதையடுத்து, குறித்த சுகாதார சேவை அதிகாரி, தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில், கர்ப்பிணித் தாயின் வீட்டிற்கு விரைந்துள்ளார்.எனினும், குறித்த சுகாதார அதிகாரி வீட்டிற்கு செல்லும் சந்தர்ப்பத்தில், குழந்தை பிரசுரிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதையடுத்து, குழந்தை மற்றும் தாய் ஆகியோர் நிகவரெட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்னிபத்: 'ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு ஆள் சேர்க்கும் திட்டம்' - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
அரசு பணத்தைச் செலவு செய்து, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு பணியாட்களை நியமனம் செய்யும் அக்னிபத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் குறுகியகால, ஒப்பந்த முறை பணி நியமனம் அளிக்கும் அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அக்னிபத் திட்டத்தை எதிர்க்கும் விதமாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 16 இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது நாராயணசாமி பேசுகையில், "23 வயதில் ஒரு இளைஞன் இந்த அக்னிபத் திட்டத்தின் மூலம் சென்றுவிட்டு மீண்டும் வரும்போது அவனது எதிர்காலத்திற்கு என்ன செய்வார்கள்.? 47 ஆயிரம் பேரில் 75 சதவீதத்தினர் வெளியே வந்த பிறகு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்.
அவர்களுக்கு வேலையில் பாதுகாப்பு இருக்காது. இப்படி வெளியே வரும் 75 சதவீதத்தினரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு சதி திட்டம். பாரதிய ஜனதா கட்சியில் அரசு பணத்தை செலவு செய்து தங்களுடைய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு பணியாட்களை நியமனம் செய்யும் வேலையை செய்கின்றனர். இதை உடனடியாக கைவிட வலியுறுத்துகிறோம்," என்றார்
'ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்க வேண்டும்' - புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளர்
ஓபிஸ் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சி பதாகைகளில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பின்னீர்செல்வம் உருவ படம் இடம்பெற்றிருந்தது. இந்த பதாகையில் இருந்த, ஓ.பி.பன்னீர்செல்வத்தின் படத்தை நிர்வாகிகள் கிழித்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளருமான அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுகவிற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் சதி செயலை எடப்பாடி பழனிச்சாமி முறியடித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்த திமுக தலைவர் ஸ்டாலினின் நோக்கத்தை எடப்பாடி முறியடித்துள்ளார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற திமுகவின் பி-அணியாக (B Team) செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்றார்.