You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையில் உள்ள சுவரை தகர்த்திடுங்கள்: ஸெலென்ஸ்கி

ஜெர்மன் நாடாளுமன்றத்தில் தனது உரையில், யுக்ரேனில் ரஷ்ய போரை நிறுத்த உதவ வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. வணக்கம் நேயர்களே!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

    இன்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகள்:

    • ரஷ்யாவில் பிரபல நிறுவனங்களான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், பர்கர் கிங், மேரியட் ஹோட்டல் குழுமம், அக்கார் ஆகியவை சிக்கலான ஒப்பந்தங்களால் தங்களின் கிளைகளை மூட முடியாமல் இருக்கின்றன.
    • மேலூர் அருகே, விவசாயம் செழிக்க வேண்டியும், சாதி, மத பேதமின்றி கிராம மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும்நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல வகையான நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
    • திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல, தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும் என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
    • யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரை ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். 10 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினாலும், கூர்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.
    • மேரியோபோல் அரங்கத்தில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
    • விராலிமலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் ஐ.ஜி., உத்தரவின்படி, விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. பர்கர் கிங், மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பது ஏன்?,

    பிரபல நிறுவனங்களாக மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், பர்கர் கிங், மற்றும் மேரியட் ஹோட்டல் குழுமம், அக்கார் ஆகியவை சிக்கலான ஒப்பந்தங்களால் தங்களின் கிளைகளை மூட முடியாமல் இருக்கின்றன.

    இந்த நிறுவனங்கள் ரஷ்ய வணிகங்களை மூன்றாம் தரப்பினருக்கு அவுட்சோர்ஸ் செய்துள்ளன; இதனால், அவர்களின் பெயரைக் கொண்ட நடக்கும் நிறுவன செயல்பாடுகளை, அவர்கள் உரிமை கோர முடியாது.

    இந்த நிறுவனங்கள் அனைத்தும் ரஷ்யாவில் இன்னும் ஆயிரம் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளன.

    அங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் நிறுவனத்திற்கு 48 கடைகள் உள்ளன; பர்கர் கிங்கின் 800 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேரியட்டின் 28 விடுதிகளும், அக்கார் நிறுவனத்தின் 57 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிறுவனங்கள் சட்டப்பூர்வ உரிமை ஒப்பந்தங்களில் சிக்கி இருப்பதை பிபிசி அறிந்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பிரபல இடங்களிலும், ஷாப்பிங் மால்களிலும் இருந்து அவர்களின் பெயரை அகற்றுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது.

  3. மேலூர் அருகே விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடித் திருவிழா

    மேலூர் அருகே, விவசாயம் செழிக்க வேண்டியும், சாதி, மத பேதமின்றி கிராம மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும்நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல வகையான நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யமுத்தான்பட்டியில் உள்ள கரை முனியாண்டி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பூலான்குடி கண்மாயில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் சாதி, மத பேதமின்றி சமத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

    இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவையொட்டி, உறங்காண்பட்டி, வெள்ளலூர்,கோட்டநத்தாம்பட்டிமற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக அதிகாலையிலே கண்மாயில் வந்து குவிந்தனர்.

    இதனையடுத்து, கிராமத்தின் சார்பில் பெரியவர்கள் துண்டுவீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில் ஒன்றாக இறங்கி, தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு கட்லா, ரோகு, சிலேபி, கெழுத்தி என பல்வேறு வகையான நாட்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

  4. சீனாவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு - தங்களது செயல்பாடுகளை நிறுத்திய பெரு நிறுவனங்கள்

    சீனாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு நிறுவங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன.

  5. திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும்: விஜய பிரபாகரன்

    திமுக ஆட்சியைப் பிடித்ததுபோல, தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும் என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் செய்தியார்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக ‘கேப்டனால்’ (விஜயகாந்த்) உருவாக்கப்பட்ட கட்சி. நான் தேமுதிகவை பலப்படுத்த வந்திருக்கிறேன். மேலும் வெற்றி தோல்வி என்பது அனைத்திலும் உள்ளது.

    10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல்,10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக இன்று வீழ்ந்துள்ளது. தேமுதிகவை எழுச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் தேமுதிகவும் ஒருநாள் ஆட்சிக்கு வரும்” என்றார்

    தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன்,“நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவும் திமுகவும் அரசியல் செய்து வருகிறது. யுக்ரேனில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு தமிழகத்தில் மருத்துவம் பயில ஏற்பாடு செய்கின்ற அதே வேளையில், அந்த மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வேண்டுமா? இல்லையா? என்பதை முதலில் திமுகவும் பாஜகவும் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

  6. சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையில் உள்ள சுவரை தகர்த்திடுங்கள்: ஜெர்மன் நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உரை

    யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரை ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர். 10 நிமிடங்கள் மட்டுமே அவர் உரையாற்றினாலும், கூர்மையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார்.

    தனது உரையில், யுக்ரேனில் ரஷ்ய போரை நிறுத்த உதவ வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். அப்போது, இரண்டாம் உலகப் போர் மற்றும் கம்யூனிசத்தின் வீழ்ச்சி என, போர் தொடர்பான ஜெர்மனியின் சொந்த அனுபவங்களை அவர் எடுத்துரைத்தார்.

    யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து 108 யுக்ரேனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதை கூறிய அவர், ஒவ்வொரு ஆண்டும் ஹோலோகாஸ்ட் நிகழ்வை (ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு) அரசியல் தலைவர்கள் நினைவில் கொண்டுள்ளனர் என்றும், “இது மீண்டும் நிகழக்கூடாது” என்கின்றனர், ஆனால், “இந்த வார்த்தைகள் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது” என அவர் தெரிவித்தார்.

    ரஷ்யாவுடனான பொருளாதார உறவை கட்டுப்படுத்த வேண்டும் என, போருக்கு முன்னதாகவே ஜெர்மனியை யுக்ரேன் வலியுறுத்தி வந்தது. ஆனால், “சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்திற்கு இடையில் ஒரு சுவரை எழுப்ப” ரஷ்யாவுக்கு ஜெர்மனி உதவியது என தெரிவித்த ஸெலென்ஸ்கி, “அந்த சுவரை தகர்த்திடுங்கள்” என தெரிவித்தார்.

    ஸெலென்ஸ்கியின் உரை நிறைவுற்ற பின்னர், கட்டாய கொரோனா தடுப்பூசி குறித்து ஜெர்மன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் செப் முல்லர், யுக்ரேனில் குழந்தைகள் உள்ளிட்டோர் தஞ்சம் புகுந்த அரங்கத்தில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து முறையான விவாதத்தை நடத்தாமல், ஜெர்மன் அரசு “வழக்கமான பணிகளுக்குத்” திரும்பியுள்ளதாக புகார் தெரிவித்தார்.

  7. யுக்ரேனில் இன்று என்ன நடக்கிறது?

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? இன்று இதுவரை யுக்ரேனில் என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • மேரியோபோல் அரங்கத்தில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
    • யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து குறைந்தது 107 குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும், 120 குழந்தைகள் காயமடைந்தனர் என்றும், யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • போர் தொடங்கியதிலிருந்து யுக்ரேனிலிருந்து சுமார் 1.95 மில்லியன் பேர் போலாந்தில் தஞ்சம் புகுந்ததாக, போலாந்து எல்லை பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.
    • தங்களுக்கு உதவியதற்காக ஜெர்மனிக்கு யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் உதவி “போரை நிறுத்துவதற்கு மிக தாமதமாக வந்துள்ளதாக” அவர் தெரிவித்தார்.
    • யுக்ரேனுடன் அமைதி ஒப்பந்தத்தை அடைவதற்காக, தங்கள் நாட்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் பெரிதளவில் ஈடுபட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யப்படைகள் நடத்தும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் நேரலை செய்தி ஒளிபரப்பின்போது முழக்கமிட்ட ஊடகவியலாளர், தான் “ஒருபக்க சார்பு நிலையில் இருக்க மாட்டேன்” என தெரிவித்தார்.
    • 100 படையினருடன் ஏவுகணை தாக்குதலை எதிர்க்கும் வகையிலான பாதுகாப்பு ஏவுகணைகளை (Sky Sabre missile system) போலாந்துக்கு அனுப்ப உள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்தார்.
    • மேலும், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் பிபிசியிடம் கூறுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு “போர் குற்றவாளி” என்பதற்கு, “மிக, மிக வலுவான ஆதாரங்கள் உள்ளன” என தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதினை “போர் குற்றவாளி” என கூறியிருந்தார்.
  8. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் - 3 போலீசார் பணியிடை நீக்கம்

    விராலிமலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் ஐ.ஜி., உத்தரவின்படி, விராலிமலை காவல் நிலையத்தில் பணியாற்றிய 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கவரப்பட்டி பகவான்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.

    இவர் கவரப்பட்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாகவும், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அவ்வழியே செல்லும் பெண்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.

    இதனைதொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து விராலிமலை காவல் நிலையத்திற்கு சங்கரின் செல்போன் எண்ணை கொடுத்து நடந்த விவரத்தை கூறி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

    சங்கரை தொடர்பு கொண்ட விராலிமலை போலீசார் அவரிடம் மேற்படி விபரம் குறித்து கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதானால் ஆத்திரமடைந்தபோலீசார், சங்கர் இருப்பிடத்தை அறிந்து கொண்டு தலைமை காவலர் செந்தில், காவலர்கள் பிரபு, அசோக் ஆகிய 3 பேரும் பகவான்பட்டி சென்று அங்கிருந்த சங்கரை பைக்கில் ஏற்றி விராலிமலை காவல் நிலையத்திற்கு அழைத்து, வந்து வெளியில் இருந்த ஒரு மரத்தில் சாய்த்து வைத்து, லத்தியால் அடித்தும், கால்களால் உதைத்துள்ளனர்.

    இதில் சங்கருக்கு கை, கால் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கர் வீட்டு செல்லும் வழியில் மயங்கி விழுந்துள்ளார்.

    இதனையடுத்து, சங்கர் தாய் மாரியாயி சங்கரை போலீசார் அழைத்து சென்ற தகவலறிந்து,மகன் குறித்து, போலீசாரிடம் விசாரித்து உள்ளார். அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

    அப்பகுதியில் மகனை தேடும் போது சாலையோரம் மயங்கிய நிலையில் சங்கர் கிடந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியாயி அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் சங்கரை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக திருச்சி ஐ.ஜி.,பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் பார்வையற்ற மாற்றுத்திறனாளியை தாக்கிய விராலிமலை போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.

  9. இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம்: நேரலை

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. கொழும்பில் மண்ணெண்ணெய்க்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

    இலங்கையில் இருந்து கள நிலவரங்களுடன் நேரலை

  10. யுக்ரேனில் இதுவரை 107 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் – அதிகாரிகள் தகவல்

    யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து குறைந்தது 107 குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும், 120 குழந்தைகள் காயமடைந்தனர் என்றும், யுக்ரேனிய விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த உயிரிழப்புகளில் கீயவ், கார்கீவ், டொனியட்ஸ்க், செரீனிஹிவ், சுமி, கேர்சன், மிக்கோலைவ், ஸிட்டோமிர் ஆகிய பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவானதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஷெல் தாக்குதலில் சுமார் 410 கல்வி நிறுவனங்கள் சேதமடைந்ததாகவும், அவற்றுள் 63 நிறுவனங்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குறைந்தது 11 மருத்துவமனைகளில் ஷெல் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  11. தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் அவசியமா? - அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள்,

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்பவர் கொலை வழக்கில், தீரன் சின்னமலை பேரவையை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சாகும் வரையில் ஆயுள் சிறை விதித்து மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த வழக்கில், கொலையான கோகுல்ராஜுக்கும் யுவராஜுக்கும் தனிப்பட்ட முன்விரோதம் எதுவும் இல்லை எனவும் மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் காதலித்தார் என்பதற்காகவே கொல்லப்பட்டதையும் நீதிபதி சம்பத்குமார் விவரித்திருந்தார்.

    இதற்கு முன்னதாக, உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி - முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் சில வழக்குகள் மேல்முறையீட்டின்போது நீர்த்துப் போவதையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

  12. இலங்கைக்கு கூடுதலாக ரூ.7,500 கோடி கடனுதவி: இந்தியா

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.7,500 கோடி) கடனுதவி வழங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில், "அண்டை நாடுகளே முக்கியம். இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது.

    அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

    இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சத்திற்கு சென்றுள்ள நிலையில், நாட்டிலுள்ள அடிமட்ட மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் 2020ம் ஆண்டு கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தின் வசம் கையிருப்பிலிருந்த அந்நிய செலாவணி பாரியளவில் வீழ்ச்சி அடைந்தது.

    இதையடுத்து, இலங்கை பொருளாதார ரீதியில் படிப்படியாக பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது நெருக்கடியின் உச்சத்தை தொட்டுள்ளது.

    அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், இலங்கைக்குக் கூடுதலாக சுமார் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

  13. இனி யாரேனும் லஞ்சம் கேட்டால் வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கலாம்: பஞ்சாப் முதல்வர்

    பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் பகவந்த் மான், லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ் அப் செயலி மூலமாகவே அளிக்கும் வகையில் உதவி எண் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த உதவி எண், விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான மார்ச் 23 அன்று அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், “அந்த உதவி எண் என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணாக இருக்கும். பஞ்சாபில் உங்களிடம் யாரேனும் லஞ்சம் கேட்டால் மறுக்காதீர்கள், அதற்கு பதிலாக அதனை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து அந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள். என்னுடைய அலுவலகம் அதுகுறித்து விசாரணை நடத்தும். எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.

  14. “வருத்தத்துடனும் கோபத்துடனும் உள்ளோம்”: யுக்ரேனிய அகதி

    தற்போது போலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள யுக்ரேனிய அகதி ஒருவர், ரஷ்ய படையெடுப்பு குறித்து தான் “வருத்தத்துடனும் குழப்பத்துடனும் கோபத்துடனும்” இருப்பதாக தெரிவித்தார்.

    யுக்ரேனில் பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடங்கிய நிலையில், கீயவில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறி, தலைநகரிலிருந்து தெற்கில் 119 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள செர்காசி நகருக்கு அங்குள்ள குடும்பத்தினருடன் இணைந்துகொள்ள சென்றனர், யானா சினியாவினாவும் அவருடைய 52 வயதான தாய் லியுபோவ் சினியாவினாவும்.

    ஆனால், யுக்ரேனில் மேலும் பல பகுதிகளுக்கு ரஷ்யப்படைகள் நகர்ந்த நிலையில், தங்கள் நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த அவர்கள் இருவரும், போலாந்து – யுக்ரேன் எல்லை வழியாக வெளியேறி, தற்போது தென் – கிழக்கு போலாந்து நகரமான ஷெமுஷா நகரில் உள்ளனர்.

    தற்போது, ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் வசித்துவரும் லியுபோவ்வின் சகோதரியுடன் இணைந்துகொள்வதற்காக, அங்கு செல்ல 11 மணிநேர ரயில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

    யுக்ரேனிலிருந்து வெளியேறியதற்கான பயணம் குறித்து யானா பிஏ செய்தி முகமையிடம் கூறுகையில், “பல சமயங்களில் நாங்கள் பயத்துடன் இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் இங்கே இருக்கிறோம், போலாந்து எங்களுக்கு வழங்கிவரும் உதவியால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளோம்” என தெரிவித்தார்.

    போர் குறித்து கூறிய அவர், “அவர்கள் (ரஷ்யப்படைகள்) எங்கள் நிலத்திற்கு வந்ததால், நாங்கள் வருத்தத்துடனும் குழப்பத்துடனும் கோபத்துடனும் உள்ளோம். அவர்கள் எங்கள் வீடுகளுக்கு வந்துள்ளனர்” என்றார்.

  15. KTM பைக்கில் சென்று ஆடு திருடிய இருவர் - சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறை விசாரணை

  16. மேரியோபோல் அரங்கத்தில் தாக்குதல்: பேரழிவை விளக்கும் புகைப்படம்

    மேரியோபோலில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு முன்னும் தாக்குதலுக்குப் பின்னுமான இந்த புகைப்படம், அங்கு ஏற்பட்ட பேரழிவை விளக்குவதாக அமைந்துள்ளது.

    வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அடைக்கலம் புகுந்த பகுதி, இத்தாக்குதலில் சேதமடையவில்லை எனவும், அங்கிருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த அரங்கத்தில் தாக்குதலுக்கு முன்னதாக, “1,000 பேருக்கு மேல்” தஞ்சம் புகுந்ததாக, யுக்ரேன் நாடாளுமன்ற உறுப்பினர் டிமிட்ரோ குரின் பிபிசி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த அரங்கத்திற்குள் குழந்தைகளும் இருப்பதாக, வானிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் எழுதப்பட்டிருந்தபோதிலும், அக்கட்டடம் மீது ரஷ்யப்படைகள் தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

  17. பள்ளி மீது ஏவுகணைத் தாக்குதல் – யுக்ரேன் அவசர சேவைப்பிரிவு

    கல்வி நிறுவனம் ஒன்றில் ரஷ்யப் படைகள் நள்ளிரவு 03:30 மணியளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேனிய அவசர சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

    யுக்ரேனின் வடமேற்கில் உள்ள கார்கீவின் மேரேஃபாவில் அமைந்துள்ள அக்கட்டடம் இத்தாக்குதலில் சேதமடைந்ததாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இக்கட்டடத்திற்குள் அமைந்துள்ள பள்ளி மற்றும் கலாச்சார மையம் ஒன்று தாக்குதலுக்குள்ளானதாக, உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இதில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரம் தெரியவரவில்லை.

  18. பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா? - நிபுணர்கள் தரும் விளக்கம்,

    "தற்போதைய உணவுப் பழக்கம், சரிவிகித உணவின்மை, காய்கறி, பழங்களை தவிர்ப்பது, உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களினால் உடல் பருமன் அதிகரித்து, உயிரணுக்கள் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் இயல்பாகவே ஏற்படுகின்றன.

    எப்போதாவது ஒரு நாள், திருமணம் உள்ளிட்ட விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, இப்போது எங்கும் கிடைக்கிறது. இதனால், சிலர் வாரத்திற்கு 2, 3 நாட்கள், சிலர் வாரம் முழுவதும் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனால், தேவைக்கு மேல் அதிகரிக்கும் கலோரி எரிக்கப்படாதால், உடல் பருமன் ஏற்படும். இதைத் தொடர்ந்து உயிரணுக்கள் குறைவு ஏற்படலாம். பிரியாணியால் மட்டும் உயிரணு குறைவு ஏற்படும் என்பதில்லை.

    அதேநேரத்தில், எப்போதாவது ஒரு நாள் பிரியாணி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இருக்காது. வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சாப்பிட்டால் வாய்ப்புள்ளது" என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

  19. யுக்ரேனில் தற்போது என்ன நடக்கிறது?

    இந்த நேரலைப் பக்கத்தில் தற்போதுதான் இணைந்தீர்களா? இன்று அங்கு என்ன நடக்கிறது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ள மேரியோபோலில், பேருந்துகள் மூலம் சுமார் 300 அகதிகள் எல்லைப்பிரதேசமான ரஷ்யாவின் ரோஸ்டோவை வந்தடைந்துள்ளதாக, ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது. மேரியோபோலில் சுமார் 1,000 பேர் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ரஷ்யப்படைகள் நேற்று ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக, அந்நகர மேயர் தெரிவித்தார்.
    • மேரியோபோல் அரங்கத்தில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டினார். ஆனால், இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.
    • தலைநகர் கீயவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணையின் உடைந்த பாகங்கள் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கிடையே யாரேனும் சிக்கியுள்ளார்களா என, மீட்புக்குழுவினர் தேடி வருவதாக, யுக்ரேனிய அவசர சேவை தெரிவித்துள்ளது.
    • செரீனிஹிவில் ரொட்டித்துண்டுக்காக வரிசையில் காத்திருந்த 13 பேர் ரஷ்யப் படையினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை “போர்க் குற்றவாளி” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியநிலையில், இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேலும் மோசமடைந்துள்ளது. பைடனின் கருத்து “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாத சொல்லாடல்” என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
    • பைடன் இந்த கருத்தைக் கூறுவதற்கு முன்னர், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இன்னும் கூடுதல் ஆதரவை அவர் நாடினார்.
    • யுக்ரேனுக்கு கூடுதலாக 1 பில்லியன் டாலர்கள் (764 மில்லியன் பவுண்ட்) மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக உறுதி தெரிவித்துள்ளது. அதில், ட்ரோன்கள், ராக்கெட்டுகள், ரைபிள் பொருத்தப்பட்ட ஆயுதங்கள், எந்திர துப்பாக்கிகள், ரைபிள்கள், பாதுகாப்பு கவசங்கள், வெடிமருந்துகள் ஆகியவை இதில் அடங்கும்.
    • ரஷ்ய படையெடுப்பு “அனைத்து வழிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளது,” என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  20. யுக்ரேனில் உயிரிழந்த ரஷ்யப் படையினர்: சோகத்தில் ஆழ்ந்த குடும்பங்கள்,

    யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் குடும்பங்களின் இழப்புகளின் சாட்சியமாக பிபிசி ரஷ்ய சேவை ஆசிரியர் விளங்குகிறார். இதுவரை 7,000 ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது; ஆனால், 500க்கும் குறைவான ரஷ்ய படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    அலெக்ஸாண்ட்ரா மற்றும் அண்டோனினா தேவாலயத்தில் ஒரு சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில், ரஷ்ய மூவர்ண தேசியக் கொடி சுற்றப்பட்டிருக்கிறது. உயிரிழந்த ராணுவ வீரரின் தொப்பி மற்றும் புகைப்படம் ஆகியவை சவப்பெட்டி மீது வைக்கப்பட்டுள்ளது.

    மோட்டார் பொருத்தப்பட்ட ரைபிள் படையணியின் துணை கமாண்டராக இருந்தவர் மிக்கைல் ஓர்சிகோவ். அவர் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டார்.

    கருப்பு துணியை தன் தலையில் போர்த்தியுள்ள இறந்த வீரரின் மனைவியை, அவருடைய உறவினர்கள் தேற்றினர்.

    யுக்ரேனில் எத்தனை ரஷ்ய படையினர் கொல்லப்பட்டனர்?

    அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை தவிர்த்து வேறு எந்த எண்ணிக்கையையும் வெளியிடுவது ரஷ்யாவில் குற்றமாகும்.

    யுக்ரேனுக்கு எதிரான “சிறப்பு ராணுவ நடவடிக்கை” என ரஷ்ய அதிபர் மாளிகை கூறிவரும் இத்தாக்குதலில், 498 ரஷ்ய படையினர் உயிரிழந்ததாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மார்ச் 2ஆம் தேதி வெளியான சமீபத்திய எண்ணிக்கை இது. கடந்த இரு வாரங்களாக இதுகுறித்து எந்த மேலதிக தகவல்களும் வெளியாகவில்லை.

    “எங்கள் நாட்டில் நிலவும் சூழல் எளிமையானது அல்ல,” என, தேவாலயத்தில் குழுமியிருந்தோர் மத்தியில் பாதிரியார் கூறினார். “அதனை எல்லோரும் புரிந்துகொண்டுள்ளனர்,” என்றார் அவர்.