You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மேக்கேதாட்டு: தடையை மீறி பாத யாத்திரை - 33 காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு

கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறி மேக்கேதாட்டு நோக்கி பேரணியாக செல்ல முயன்றதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது கர்நாடகா மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    இத்துடன் இன்றைய நேரலை பக்கம் நிறைவு பெறுகிறது.

    எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    நாளை (ஜனவரி 11, 2021) காலை தொடங்கப்படும் புதிய நேரலை பக்கத்தில் உள்ளூர் முதல் உலகம் வரை பல்வேறு செய்திகளையும் தெரிந்துகொள்ளலாம்.

    செய்திகளை துல்லியமாக, புதிய கண்ணோட்டத்துடன் விரைவாக தெரிந்துகொள்வதற்கு பிபிசி தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  2. மேக்கேதாட்டு: கர்நாடகாவில் 33 காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு

    'நீருக்காக நடைபயணம்' என்ற பெயரில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாகவும் சட்டவிரோதமாக கூடி மக்கள் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் கூறி கர்நாடகாவில் எதிர்கட்சியான காங்கிரஸின் முக்கிய 33 தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது அம்மாநில காவல்துறை. மேக்கேதாட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, வீரப்ப மொய்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த தலைவர்கள் தாங்கள் திட்டமிட்டிருந்த 164 கி.மீ பாத யாத்திரை இரண்டாவது நாளாக திங்கட்கிழமை தொடர்ந்தனர். இவர்களின் ஏற்பாட்டின்படி மதசார்பற்ற ஜனதா தளம் செல்வாக்கு குறைந்து வரும் 60 சட்டமன்ற தொகுதிகளில் இந்த பாதயாத்திரை திட்டமிடப்பட்டிருக்கிறது.

    கர்நாடக அரசு ராம்நகரில் மேக்கேதாட்டு நீர்த்தேக்கத்தை கட்ட உள்ளது. இந்த இடம் பெங்களூருவில் இருந்து 90 கிமீ தொலைவிலும், கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் இருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது.

    "இந்தத் திட்டம் பெங்களூருவுக்கு ஒரு முக்கியமான குடிநீர்த் திட்டம் மட்டுமல்ல, இது ஒரு நீர் மின் திட்டமாகும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் 400 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசுக்கு சில எதிர்ப்புகள் உள்ளன. அதே சமயம், இந்த பாதயாத்திரையை, 'அரசியல் வித்தை' என முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.

  3. பிகார், கர்நாடகா முதலமைச்சர்களுக்கு கொரோனா

    கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கொரோனா சோதனை முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, நான் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களைப் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என கூறியுள்ளார்.

    முன்னதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டுத்தனிமையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

  4. நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் - சாய்னா நேவால் தந்தை

    ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாக நடிகர் சித்தார்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், சாய்னாவின் தந்தை ஹர்விர் சிங் நேவால், ''அவர் (நடிகர் சித்தார்த்) என்ன சொன்னாலும் அந்த கருத்து தவறானது. மிகவும் மோசமான வார்த்தைகளை சாய்னாவிற்கு எதிராக பயன்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. இதை உள்நோக்கத்துடனோ அல்லது உள்நோக்கமின்றியோ தெரிவித்திருந்தாலும், அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமர் மோதியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறை குறித்து சாய்னா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, நடிகர் சித்தார்த் ஆபாசமான பொருள் தரும் கருத்தை பதிவிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவரது பதிவை முடக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ''இந்த கருத்து வெறுப்பு, மூர்க்கத்தனமானது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது குறித்து சித்தார்த், ''அவமத்iக்கும் நோக்கம் எதுவும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

  5. பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு

    பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பான தகவலை அம்மாநில முதல்வர் அலுவலகம் அதன் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டுத்தனிமையில் ஓய்வெடுத்து வருவதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  6. சிறுமி பாலியல் வன்முறை - முதியவர், உறவினர் உள்ளிட்ட 8 பேர் கைது

    விழுப்புரத்தில் 11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 77 வயது முதியவர், சிறுமியின் உறவினர் உளளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த சிறுமி உறவினர் வீட்டில் தங்கி 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவருடைய பெரியம்மா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருவுற்றிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தைகள் உதவி எண் 1098 மூலம் அவரது பெரியம்மா புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில் சிறுமியின் உறவினர் ஒருவர், 77 வயது முதியவர் உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சட்டத்தின் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''சிறுமியை அவரது பெரியம்மா மகன், பக்கத்து வீட்டுக்காரர் என பலர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நேற்று இந்த வழக்கில் 3 பேரை கைது செய்தோம். இன்றுமேலும் 5 பேரை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

  7. மேக்கேதாட்டு அணை: கர்நாடக காங்கிரஸ் பாத யாத்திரையை நிறுத்த வேண்டும் - ஜி.கே.வாசன்

    மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகா காங்கிரஸ் மேற்கொள்ளும் பாத யாத்திரையை உடனடியாக தமிழக திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் எம்.பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பிரச்னையை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக , கர்நாடகா காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்ட , கர்நாடகா அரசை வலியுறுத்தி தொடர்ந்து 11 நாட்கள் பாத யாத்திரை நடத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்," என்று கூறியுள்ளார்.

    "காவிரி நீர் பிரச்னை , தமிழகத்தின் பயிர் பிரச்சனையல்ல உயிர் பிரச்னை . கர்நாடகா காங்கிரசாரின் இந்த செயல். அரசியல் உள்நோக்கம் கொண்டது , மிகவும் கண்டிக்கதக்கது."

    "இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி , கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுவே தமிழக டெல்டா பகுதி மற்றும் அனைத்து விவசாயிகளுடைய எண்ணங்களும் , கோரிக்கைகளும் ஆகும்,'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

  8. இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கொரோனா

    இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.

    தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத் சிங் தமது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டில் வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன், பா.ஜ.க பிரமுகரும் நடிகையுமான குஷ்பு உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  9. இந்த மாதத்தின் சிறந்த வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேல் தேர்வு: ஐசிசி

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை தேர்வு செய்துள்ளது.

    கடந்த டிசம்பரில் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

    இதன் மூலம் ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்பிளே ஆகியோருக்குப் பிறகு உலகின் மூன்றாவது சிறந்த பந்துவீச்சாளர் ஆக அஜாஸ் படேல் திகழ்கிறார்.

  10. ரயில்வே பாதுகாப்பு படைக்கு இந்த ஆண்டு ஆள் தேர்வு இல்லை – இந்திய ரயில்வே

    இந்திய ரயில்வே பாதுகாப்புப் படைக்கு (ஆர்.பி.எப்) காவலர் சேர்ப்பு 2022 தேர்வு நடைபெறுவதாக சில இணையதளங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    ஆனால், ''அத்தகைய ஆட்சேர்ப்பு அறிவிப்பு எதுவும் ரயில்வே பாதுகாப்பு படையால் வெளியிடப்படவில்லை'' என்று இந்திய ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  11. ஜல்லிக்கட்டு: கட்டுப்பாடுகளுடன் அனுமதி - பார்வையாளர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, 150 பார்வையாளர்களுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருவரும் 2 தவணை தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்.

    மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டுக்கு 3 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி அட்டையை பெற வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகளில் மொத்தம் 300 மாடுபிடி வீரர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    தமிழ்நாட்டில் மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  12. ஆங் சான் சூ ச்சீக்கு 4 ஆண்டுகள் சிறை: மியான்மர் நீதிமன்றம்

    மியான்மர் நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வாக்கி டாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது, அவற்றை இறக்குமதி செய்தது. கோவிட் 19 தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

    நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ ச்சீக்கு, மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட ராணுவ புரட்சிக்கு பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  13. மின்வேலிகளால் இறக்கும் யானைகள் - பாதிப்புகள் குறித்த விரிவான அலசல்

    இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் 741 யானைகள் மின் வேலியில் அடிபட்டும், 186 யானைகள் ரயிலில் மோதியும், 169 யானைகள் வேட்டையாடப்பட்டும், 64 யானைகள் விஷம் வைக்கப்பட்டதாலும் உயிரிழந்திருக்கின்றன.

    கடந்த 8 ஆண்டுகளில் யானைகளால் தாக்கப்பட்டு 3,767 பேர் இறந்துள்ளனர். அதிகரித்து வரும் யானைகளின் மரணங்கள். யானை - மனித மோதல், இந்தியாவில் யானைகளின் பாதை, வாழ்விடம் தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.

    ''வன உணவுச் சங்கிலியில் யானைகளின் பங்கு முக்கியமானது. யானைகள் பயன்படுத்தாத காடுகளில் மனிதனால் நுழைய முடியாது,'' என்கிறார்கள் நிபுணர்கள். இது குறித்த விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

  14. தமிழ்நாட்டில் ரூ. 4, 000 கோடியில் மருத்துவ கல்லூரிகள்: ஜனவரி 12இல் காணொளி மூலம் திறக்கும் நரேந்திர மோதி

    தமிழ்நாட்டில் ரூ.4,000 கோடியில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில்,ரூ.2,145 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோதி வரும்12ஆம் தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா:தமிழ்நாட்டில் 36.26 லட்சம் பேருக்கு பூஸ்டர்

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை இன்று முதல் செலுத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எம்.ஆர்.சி நகரில் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் 5.65 லட்சம், இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் 20.83 லட்சம் உள்ளிட்ட மொத்தம் 36.26 லட்சம் பேர் பூஸ்டர் செலுத்திக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

  16. பிரதமர் பஞ்சாப் பயண விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் பெரேஸ்பூர் சென்ற போது, ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''பிரதமரின் பயண பாதுகாப்பு குறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவில், பஞ்சாப் டிஜிபி, தேசிய புலனாய்வு முகமை ஐ.ஜி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

    இந்த குழு மிக விரைவாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.'' என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜோகோவிச் ஆஸ்திரேலிய விசா ரத்து நிறுத்தம்

    செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விசா அண்மையில் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசி ஆதாரத்தை தராததால் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறாமல், அங்கேயே தங்கி, ஜோகோவிச் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தற்போது அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

  18. கோவா பா.ஜ.க அமைச்சர் ராஜிநாமா

    கோவா மாநில பா.ஜ.க அமைச்சர் மைக்கேல் லோபோ பதவி விலகியுள்ளார். எம்.எம்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து மைக்கேல் லோபா கூறுகையில், ''கட்சித் தொண்டர்கள் அதிருப்தியாக உள்ளனர். எங்கள் மீதான பார்வை வருத்தமளிக்கிறது. கோவா பா.ஜ.கவில் மனோகர் பாரிக்கரின் செயல்பாடுகளால் சரியாக இல்லை. அவரை ஆதரித்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சிகளுடன் பேசி வருகிறேன். என் முடிவை என் தொகுதி மக்கள் ஏற்பார்கள் '' என்கிறார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  19. ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் – அமைச்சர் மூர்த்தி மீண்டும் உறுதி

    தமிழ்நாட்டில் தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    இதையடுத்து, வாடிவாசல்கள் வண்ணம் தீட்டப்படுவது. பார்வையாளர் மாடம், வீரர்கள், காளைகள் பரிசோதனை மையம், மருத்துவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. காளைகளுக்கு பரிசோதனை செய்து, அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்வு இன்று காலை, நடைபெற்றது. இதற்காக, வாடிவாசல் அருகே முத்தாலம்மன் கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அரசு வழிகாட்டுதல்படி, ஜல்லிக்கடை நடத்துவோம் என்று கிராமக் கமிட்டியினர் தெரிவித்தனர்.

    தமிழ்நாடு வணிகரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளார்களிடம் கூறுகையில், ‘’கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்களை முதலமைச்சர் இன்று வெளியிடுவார். ‘’ என்றார்.

  20. கொரோனா தற்கொலை:விழிப்புணர்வு ஏற்படுத்த ஓபிஎஸ் கோரிக்கை

    கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராம ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த லட்சுமி மகள் ஜோதிகாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    அருகில் வசிப்பவர்கள் விலகிச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் லெட்சுமி, அவரது மகள் ஜோதிகா, மகன் சிபிராஜ், பேரன் ரித்திஷ்ஆகிய நால்வரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், ஜோதிகா அவரது மகன் ரித்திஷ் இருவரும் உயிரிழந்துள்ளனர். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து வேதனையாக இருக்கிறது.

    எனவே, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, அவர்களின் பொருளாதார நிலை அறிந்து உதவ வேண்டும். மன நிலையை அறிந்து, விழிப்புணர்வு ஆலோசனைகளையும் அரசு வழங்க வேண்டும்.’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.