மீண்டும் திரையரங்குகளில் வெளியான 'பாகுபலி' - இதில் என்ன புதுமை?

மீண்டும் திரையரங்குகளில் வெளியான 'பாகுபலி' - இதில் என்ன புதுமை?

'பாகுபலி - தி எபிக்' (Baahubali – The Epic) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 2015-இல் பரபரப்பை ஏற்படுத்தி, 2017-இல் பாகம்-2 ஆக வந்த இரண்டு திரைப்படங்களையும் சேர்த்து, ஒரே படமாக மீண்டும் வெளியிட்டுள்ளனர். இது எப்படி இருக்கிறது?

கதை அனைவருக்கும் தெரியும். முதல் பாகத்தில், மகேந்திர பாகுபலி, மகிழ்மதிக்குச் சென்று தாய் தேவசேனாவை விடுவிக்கிறான். அவனது தந்தை அமரேந்திர பாகுபலி பற்றி கட்டப்பா கூறுகிறார்.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? இந்த சஸ்பென்ஸை இரண்டு ஆண்டுகள் தாங்கிக் கொண்டுதான் ரசிகர்கள் பாகம்-2 ஐ பார்த்தனர்.

இரண்டாம் பாகத்தில், பாகுபலி - தேவசேனா காதல், சிவகாமி தவறாகப் புரிந்து கொள்வது, பல்வாள் தேவனின் சதி, இறுதியாக வில்லனின் அழிவு ஆகியவை இடம்பெற்றன.

இரண்டு பாகங்களும் எடிட் செய்யப்பட்டு, 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய நீளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இடைவேளை வரை முதல் பாகமும், அதன் பிறகு மீதிக் கதையும் வருகிறது.

இது ஒரு எடிட்டிங் அற்புதம். இரண்டு மணி நேர சினிமா வெட்டப்பட்டிருந்தாலும், சிலிர்ப்பூட்டும் காட்சிகள் எதுவும் விடுபடவில்லை.

முதல் பாகத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் நீக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில் ஒரு பாடல் நீக்கப்பட்டுள்ளது. தமன்னாவின் காதல் கதை பின்னணிக் குரல் (Voice Over) மூலம் வேகமாகக் கடந்து செல்லப்படுகிறது.

சுதீப்பின் காட்சி நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை அனைத்தும் சுருக்கப்பட்டுள்ளன. புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவற்றைக் கண்டறிவது சிரமம். சண்டைக் காட்சிகள் துல்லியமாக எடிட் செய்யப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.