You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரியில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் சீட்டுக்கட்டாக சரிந்த கட்டடம் - என்ன காரணம்?
புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடைபெறவில்லை.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சாவித்திரி. கணவர் ரங்கநாதன் உயிரிழந்த நிலையில், இவர் தனது மகள் சித்ரா மற்றும் மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அதே பகுதியில் அரசு இலவசமாக கொடுத்த பட்டா இடத்தில் மூன்று மாடி வீடு கட்டி வந்தனர். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிந்த நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி வீட்டின் புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி திட்டமிட்டிருந்தார்.
இதற்கிடையே அந்த வீட்டின் அருகே செல்லும் வாய்காலுக்கு சுவர் கட்டும் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாவித்திரி வீட்டருகே வாய்கலுக்கு சுவர் கட்டுவதற்காக ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வீடு லேசாக சாய்ந்து காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி இதுதொடர்பாக வாய்க்கால் சுவர் கட்டும் ஒப்பந்ததாரரிடம் முறையிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று வீடு மிக மோசமாக சாய்ந்தவாறு காணப்பட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர், ஆகியோர் வீட்டின் தரத்தை ஆய்வு செய்ய வந்து பேசிகொண்டிருந்தபோது வீடு திடீரென முற்றிலுமாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கு இருந்தவர்கள் ஓட்டம் பிடித்ததால் யாருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை.
தொடர்ந்து வீடு இடிந்து விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவவும், அதற்கு பின்னரே வீடு அதிக உயரத்தில் தரமன்றி கட்டப்பட்டதால் சரிந்து விழுந்ததா? அல்லது வாய்க்காலுக்கு பள்ளம் எடுத்ததால் விழுந்ததா என தெரியவரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)