You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் vs இரான்: லெபனானை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் அறிவுறுத்தல்
ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மறுபுறம், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலைமை "விரைவாக மோசமடையக் கூடும்" என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் இரான் ஆதரவுக் குழுக்களில் ஒன்றான, லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா, இரானின் அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்றும், இது இஸ்ரேலின் கடுமையான பதிலடியை தூண்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைப் போன்றே இந்தியாவும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. லெபனான் - இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தியர்கள் லெபனானை விட்டு வெளியேறுமாறு ஆகஸ்ட் 1ம் தேதி பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
"உங்களால் அங்கிருந்து வெளியேற முடியாவிட்டால், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மறு அறிவிப்பு வரும் வரை யாரும் லெபனானுக்கு செல்ல வேண்டாம்." என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டெல் அவிவ் நகரில் செயல்படும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களின் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைக் காக்க கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப் போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
லெபனானை விட்டு தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவ கூடுதல் இராணுவ வீரர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் எல்லைப் படை அதிகாரிகளை அனுப்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. ஆனால் "வர்த்தக ரீதியிலான விமான சேவைகள் செயல்பாட்டில் இருக்கும் போதே" லெபனானை விட்டு வெளியேறுமாறு தனது குடிமக்களை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு பிரிட்டிஷ் இராணுவக் கப்பல்கள் ஏற்கனவே இப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் விமானப்படையும் போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
"இந்த மோதல் பிராந்தியம் முழுவதும் பரவுவதில் யாருக்கும் விருப்பமில்லை" என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)