You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் மீண்டும் சலசலப்பை கிளப்பிய டிரம்ப் கருத்து - என்ன சொன்னார்?
கடந்த மே மாதம் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது ஐந்து போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். எந்த நாட்டின் போர் விமானம் என அவர் குறிப்பிடவில்லை என்றாலும், டிரம்ப் தெரிவித்த கருத்து இந்தியாவில் கவனம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் பாஜக அரசை நோக்கி கேள்வியை எழுப்பி இருக்கிறது. நடந்தது என்ன?
வெள்ளிக்கிழமை இரவு, வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுடனான இரவு விருந்தின் போது டிரம்ப் உரையாற்றினார். அதில், நாம் நிறைய போர்களை நிறுத்தி உள்ளோம் எனக் கூறிய டிரம்ப், இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், சண்டையை நிறுத்தாவிட்டால் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டோம் எனக் கூறியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப் பேசிய காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ், இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறினார். அதோடு, வர்த்தக ஒப்பந்தம் மூலம் மிரட்டி போரை நிறுத்தினேன் என 24ஆவது முறையாக கூறினார். டிரம்ப் இதை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், நரேந்திர மோதி அமைதியாக உள்ளார். வர்த்தகத்திற்காக நாட்டின் கௌரவத்தை நரேந்திர மோதி ஏன் சமரசம் செய்தார்? என கேள்வி எழுப்பி உள்ளது.
பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது குறித்த கேள்விகளுக்கு இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கடந்த மே மாத இறுதியில் பதிலளித்தார். ப்ளூம்பெர்க் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், எவ்வளவு இழப்பு என்ற எண்ணிக்கை முக்கியமல்ல, ஏன் இழப்புகள் ஏற்பட்டன, அதன் பின் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம் என கூறினார்.
பாகிஸ்தான் 5 இந்திய போர் விமானங்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக கூறுகிறது. அந்த மதிப்பீடு சரியானதா என செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்பிய போது, இது முற்றிலும் தவறானது. ஆனால் நான் சொன்னது போல, எண்ணிக்கை முக்கியமில்லை. ஜெட் விமானங்கள் ஏன் விழுந்தன, அதன் பிறகு என்ன செய்தோம் என்பதுதான் முக்கியம் என கூறினார்.
இது தவிர, இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்தும் டிரம்ப் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்த வர்த்தக ஒப்பந்தத்தின் பேரில் மிரட்டியதாகவும் டிரம்ப் முன்பும் கூறி இருந்தார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலின் போது, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியிருந்தார். சண்டை நிறுத்தம் ஏற்பட்டதும் அதை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலில் தனது ட்ரூத் சோசியல் தளத்தில் அறிவித்தார்.
ஆனால், சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என இந்தியா கூறுகிறது.
சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அமெரிக்க ஊடகமான 'நியூஸ் வீக்'-க்கு அளித்த பேட்டியில் , சண்டை நிறுத்தம் முற்றிலும் இருதரப்பு சார்ந்தது என கூறினார்.
மோதலை நிறுத்த வர்த்தகம் பயன்படுத்தப்பட்டது என டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இது வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தைகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்றும் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெய் சங்கர், மே 9 ஆம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பிரதமர் மோதியுடன் பேசியபோது நான் அறையில் இருந்தேன். சில விஷயங்களில் உடன்படவில்லை என்றால், பாகிஸ்தான் இந்தியா மீது பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று அவர் கூறினார். ஆனால் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் பிரதமரை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, இந்தியாவிடமிருந்து நிச்சயமாக பதில் கிடைக்கும் என்று தெளிவாகக் குறிப்பிட்டார்" எனத் தெரிவித்தார்.
மேலும், அந்த இரவு பாகிஸ்தான் எங்களை கடுமையாக தாக்கியது. நாங்கள் உடனடியாக பதிலளித்தோம். மறுநாள் காலை மார்கோ ரூபியோ எனக்கு போன் செய்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறினார். மீதமுள்ளவற்றை உங்களால் புரிந்து கொள்ள முடியும்" என்றும் ஜெய் சங்கர் கூறினார்.
ஜூன் மாதம் பிரதமர் மோதி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றார், அங்கிருந்து அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார்.
இந்த உரையாடலின் விவரங்களை அளித்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தம் இருதரப்பு ஒப்பந்தம் என்றும், எந்த மூன்றாவது நாட்டின் தலையீட்டாலும் ஏற்படவில்லை என்றும் பிரதமர் மோதி டிரம்பிடம் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் என்ன கூறுகிறது?
இந்தியா பாகிஸ்தான் மோதலில், சண்டை நிறுத்தம் ஏற்படுத்தியதாக டிரம்ப் கூறுவதை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. சண்டை நிறுத்தத்திற்குப் பிறகு, இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், அதிபர் டிரம்பிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது என்று கூறினார்.
இதைத் தவிர, மோதலின் போது, ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் கூறியது. ஆனால், இந்தியா இதை நிராகரிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு