You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குவைத்தில் மோதி: அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 21, மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு இருநாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் குவைத்துக்கு செல்வது இதுவே முதல்முறை.
அதாவது, 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் குவைத் செல்கிறார்.
குவைத்தின் அமிர், குவைத்தின் முடியரசர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
குவைத்தின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. இந்தியாவிற்கும் குவைத்துக்கும் இடையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வர்த்தகம் சுமார்10.47 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எரிசக்தி பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை.
தனது குவைத் பயணம் குறித்தான அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர் மோதி, நமது மக்கள் மற்றும் பிராந்தியத்தின் நன்கைக்கான எதிர்கால கூட்டணிக்கனக்கான பாதையை வடிவமைக்க இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா மற்றும் குவைத் மக்களுக்கு இடையேயான சிறப்பான உறவு மற்றும் நட்பை இந்த பயணம் மேலும் வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன் என்றும் மோதி தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையில் ஆட்சியாளர்கள் பெரிதாகப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான வணிக, கலாசார உறவுகள் உள்ளன.
குவைத்தில் எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையே கடல்வழி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான ராஜ்ஜீய உறவு 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
இந்த குவைத் பயணம், அரபு நாடுகளுக்கு நரேந்திர மோதி மேற்கொள்ளும் 14வது பயணம்.
மத்திய கிழக்கில் அதிகம் வாழும் இந்தியர்கள்
குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் ஆண்டுதோறும் சுமார் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இது இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மொத்த வருமானத்தில் 6.7 சதவீதம்.
மத்திய கிழக்கில் வாழும் இந்திய மக்கள் தொகை, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்று இந்திய சர்வதேச விவகார கவுன்சிலின் மூத்த உறுப்பினரான ஃபஸூர் ரஹ்மான் தெரிவித்தார்.
"மத்திய கிழக்கில் வாழும் இந்திய மக்கள் தொகை, இந்தியாவின் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளதை பிரதமர் மோதி புரிந்து கொண்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தியதன் மூலம், வெளிநாடு வாழ் இந்திய மக்களின் நம்பிக்கையை அவர் பலப்படுத்தியுள்ளார்" என்று அவர் விவரித்தார்.
இந்தியாவின் எரிசக்தி தேவை
இந்தியா தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அரபு நாடுகளைச் சார்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது உறவை வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எண்ணெய் தேவையில் மூன்று சதவீதத்தை குவைத் பூர்த்தி செய்கிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கினாலும், அதிகளவில் மத்திய கிழக்கையே சார்ந்திருக்கும் நிலையே நீடிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வளைகுடா நாடுகளைச் சார்ந்துள்ளது, மத்திய கிழக்கு உடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அது ஒரு முக்கியமான காரணம்" என்றுஃபஸூர் ரஹ்மான் கூறுகிறார்.
குவைத் இந்தியாவின் ஆறாவது பெரிய எண்ணெய் வழங்குநர். இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் மூன்று சதவீதத்தை குவைத்தில் இருந்து பெறப்படும் எண்ணெயில் இருந்து பூர்த்தி செய்கிறது. அதுமட்டுமின்றி, குவைத் இந்தியாவில் சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஆதரவு
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அரபு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரபு நாடுகளுடனும் இந்தியா நடைமுறை உறவுகளைப் பேணுகிறது.
இதுகுறித்து பேசிய ஃபஸூர் ரஹ்மான "இன்று சர்வதேச அளவில் சுற்றுச்சூழல், பயங்கரவாதம், பாதுகாப்பு போன்ற பல பொதுவான சவால்கள் உள்ளன. பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற அரபு நாடுகளுடன் இந்தியா பாதுகாப்பு தகவல்களைப் பரிமாறி வருகிறது" என்றார்.
சர்வதேச விவகாரங்களின் நிபுணர் பேராசிரியர் ஸ்வஸ்தி ராவ், "பயங்கரவாதம் என்பது ஒரு பொதுவான சவால். இந்தியா இஸ்ரேலுடன் உறவு வைத்திருக்கும் அதே வேளையில், அரபு நாடுகளுடன் நல்ல பாதுகாப்பு உறவுகளையும் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதில் இந்தியாவும் அதன் சொந்த நலன்களைக் கொண்டுள்ளது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)