You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷாபாஸ் ஷெரீஃப்: ஒரே இரவு விருந்து மூலம் இம்ரான் அரசைக் கவிழ்த்த இவர் பாகிஸ்தான் பிரதமரானது எப்படி?
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் 2வது முறையாக தேர்வாகியுள்ளார். மார்ச் 4ம் தேதி திங்கட்கிழமை அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஞாயிறுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் 201 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற உமர் அயூப் கான் 92 வாக்குகளை மட்டுமே வென்றார். இதையடுத்து ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக தேர்வு செய்யப்படுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக் அறிவித்தார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை 2022ஆம் ஆண்டில் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக இணைந்து செயல்பட்டன. அப்போது நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்தான் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ஏற்றிருந்தார். தற்போது 2வது முறையாக அவர் பிரதமராகிறார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார். கடந்த பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தல் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டன.
இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டனர்.
பல தடைகளையும் மீறி நாடு முழுவதும் அதிகளவில் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்று இம்ரான் கானுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
265 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற 93 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்
இதைவிட அதிக இடங்களை எந்த கட்சியும் பிடித்திருக்கவில்லை.
இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்றாலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் என்ற கட்சியும் (பிஎம்எல்- என்) மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (பிபிபி) இணைந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டன.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சி 75 இடங்களையும் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வென்றிருந்தது.
இந்த இரண்டு கட்சிகளும் கடந்த 2022ல் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற இணைந்து செயல்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த கூட்டணி ஆட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையான 169 இடங்களை காட்டிலும் 32 வாக்குகள் அதிகம் பெற்று பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் தெரிவித்தார்
ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். 1990 களில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அப்போது பாகிஸ்தான் பிரதமராக அவரது சகோதரர் நவாஸ் ஷெரீஃப் பதவியேற்றிருந்தார். நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த காலம் முழுவதும் ஷாபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ராணுவத்தின் அழுத்தம் அதிகரித்ததால், 1993ல் பிரதமர் நாற்காலியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலக நேரிட்டது. அதே ஆண்டில், ஷாபாஸ் ஷெரீஃப் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக ஆனார். 1996 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1997 இல், அவர் மூன்றாவது முறையாக பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார்.
பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்தது. 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மாலை, பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கவிழ்த்தார். இந்த நிலையில், ஷாபாஸ் ஷெரீஃப்பும் கைது செய்யப்பட்டார்.
2000 வது ஆண்டு ஏப்ரலில் ஷாபாஸ் ஷெரீஃப்பின் மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீஃப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெனரல் முஷாரஃபின் விமானத்தை கடத்தியதற்காகவும், பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ராணுவ அரசு நவாஸ் ஷெரீஃப்புக்கு மன்னிப்பு அளித்தது. 40 குடும்ப உறுப்பினர்களுடன் நவாஸ், செளதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த 40 பேரில் ஷாபாஸ் ஷெரீஃப்பும் ஒருவர்.
2007 ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதில் ஷாபாஸ் ஷெரீஃப்பும் நவாஸ் ஷெரீஃப்பும் பாகிஸ்தானுக்குத் திரும்பி தேசிய அரசியலில் பங்கேற்கலாம் என்று கூறியது என்று பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனலான ஜியோ நியூஸ் குறிப்பிடுகிறது.
பாகிஸ்தானில் கடந்த 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. நவாஸ் ஷெரீஃப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) பஞ்சாப் மாகாணத்தில் அமோகமான வெற்றியுடன் ஆட்சியைப் பிடித்தது. பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபுறம், மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீஃப் பிரதமர் பதவியை கைப்பற்றினார்.
2018 பொதுத் தேர்தலில், PML-N தனது பிரதமர் வேட்பாளராக ஷபாஸ் ஷெரீஃப்பை அறிவித்தது. இந்த பொதுத் தேர்தலில் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஷாபாஸ் ஷெரீஃப் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டில், ஷாபாஸ் ஷெரீஃப்பின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், பணமோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். லாகூரில் உள்ள கோட் லக்பத் மத்திய சிறையில் சுமார் 7 மாதங்கள் கழித்தபிறகு அவர் விடுதலையானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப் எதிர்க்கட்சித் தலைவர்களை இரவு உணவிற்கு அழைத்தார். இந்த சந்திப்பு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்த விருந்தில், பாகிஸ்தானில் ஆட்சியில் உள்ள இம்ரான் தலைமையிலான அரசை அகற்ற ஓரணியில் ஒன்றிணையுமாறு ஷாபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்துதான் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு 2022 ஏப்ரல் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து பாகிஸ்தான் பிரதமராக முதல்முறையாக தேர்வானார்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)