ஜப்பான் விமான விபத்து: ஓரிரு நிமிடங்களில் 379 பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?

ஜப்பான் விமான விபத்து: ஓரிரு நிமிடங்களில் 379 பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?

எரிந்து கொண்டிருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த பயணிகள், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி தங்கள் கைப்பைகளை விட்டுவிட்டு ஆபத்து கால வழிகளை நோக்கி ஓடினர்.

விமானப் பணியாளர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் தங்கள் பொருட்களை கைவிட்டு தப்பி ஓடியதே விமானத்திலிருந்த 379 பேரும் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது.

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516 தரையிறங்கிய போது ஒரு கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்தச் சிறிய விமானத்திலிருந்து 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர்.

379 பேரும் ஓரிரு நிமிடங்களில் வெளியே வந்தது எப்படி?

இவ்விபத்தில் ஒரு சிறு தடங்கலுமின்றி விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. விமானவியல் நிபுணர்களும் விமானப் பணியாளர்களும் இது மிகச் சிறப்பாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர்களாலும், அவர்களது பாதுகாப்பு அறிவுறுத்தலைக் கேட்டு அதன்படி நடந்த பயணிகளும்தான் இதற்குக் காரணம் என்று பிபிசியிடம் கூறினர்.

கிரீன்விச் பல்கலை கழகத்தின் தீவிபத்துப் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் எட் கலீயா கூறுகையில், “நான் பார்த்தவரையில் தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது பயணிகள் வெளியேற்றத்தை தாமதப்படுத்தி மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும்,” என்கிறார் அவர்.

மேலும், “இந்த விபத்து மிகச் சிக்கலான முறையில் நடந்தது, விமானத்தின் மூக்கு கீழ்நோக்கி இருந்தது. இது பயணிகள் வெளியேறுவதைக் கடினமாக்கியது,” என்கிறார் அவர்.

வெளியேறுவதற்கான காற்று நிரம்பிய சறுக்குகள் மூன்று மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால், விமானம் நின்றிருந்த கோணத்தால் அவையும் சரியாகச் செயல்படுத்தப்பட முடியவில்லை. அது மிகவும் செங்குத்தாக இருந்திருக்கும்.

"விமானத்தின் அறிவிப்புப் பொறிமுறையும் செயல்படாமல் போனது. அதனால் விமானப் பணியாளர்கள் ஒலிபெருக்கிகள் மூலமும், சத்தமாகக் கத்துவதன் மூலமும் அறிவிப்புகளை வழங்கினர்" என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஒரு பயணிக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டதாகவும், 13 பேர் உடல் அசௌகரியத்திற்காக மருத்துவ பரிசோதனையைக் கோரியிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

"பெரும விபத்து நேரிட்டிருந்தாலும் வெறும் ஐந்தே நிமிடங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்" என்று அதில் பயணித்த யமகே என்ற பயணி கூறினார். தீ மளமளவென விமானம் முழுவதும் பரவ பத்து பதினைந்து நிமிடங்கள் ஆனதாக அவர் கூறினார்.

28 வயதான சுபாசா சவாதா (Tsubasa Sawada) "இது ஒரு அதிசயம், ஒருவேளை நாங்கள் இறந்திருக்கக் கூடும்" என்றார்.

"தீ எப்படி ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன், பதில் கிடைக்கும் வரை எந்த விமானத்திலும் பயணிக்க மாட்டேன்" என்று சவாதா மேலும் கூறினார்.

விபத்துக்குள்ளான விமானம், ஜப்பானின் வடக்கிலிருக்கும் சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குக் கிளம்பியது. இரண்டு மணி நேரத்தில் ஹனேடாவில் தரையிறங்கியது.

அவ்விடத்தில், புத்தாண்டன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்க ஒரு சிறிய கடலோரக் காவல்படை விமானம் நின்றிருந்தது. அதனோடு பெரிய விமானம் எப்படி மோதியது என்பதைப் பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)