You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காபி பொடியைப் பயன்படுத்தி ராணி எலிசபெத் ஓவியத்தை பிரம்மாண்டமாக வரைந்த ஓவியர்
இவர் பெயர் ஶ்ரீராஜ்.
இவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஓவியர். இவருடைய சாதனைகளுக்காக கிடைத்த பரிசுகளும் பதக்கங்களும் அவரின் வீட்டு வரவேற்பரையை அலங்கரிக்கின்றன.
35 வயதாகும் ஸ்ரீராஜ், ஐடிஐ தொழிற் பயிற்சி படிப்பில் சேர்ந்தும் குடும்ப சூழல் காரணமாக அதை முடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறினார்.
ஓவியக் கலையில் புதுமையான முயற்சிகளை செய்வது ஸ்ரீராஜுக்கு விருப்பம். 2013-ம் ஆண்டு ஸ்ரீராஜ் சார்கோல் (Charcoal) பென்சிலை பயன்படுத்தி 110 சார்ட் பேப்பர்களை இணைத்து 25X20 (அடி?) என்ற அளவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஓவியத்தை ஏழரை மணிநேரத்தில் வரைந்து முடித்தார் ஸ்ரீராஜ். அதற்கு Assist World Record கிடைத்தது.
அதேபோன்று, மொசைக் ஆர்ட் மூலம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 216 தீக்குச்சிகளை பயன்படுத்தி 6 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சார்லி சாப்ளின் படத்தை உருவாக்கியதற்காக ஸ்ரீராஜ் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
தற்போது மீண்டும் கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஓவியத்தை பெரிய அளவில் புதுமையான முறையில் வரைந்துள்ளார் ஸ்ரீராஜ்.
இதற்காக 3500 சதுர அடி பரப்பளவில் 70 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட கேன்வாஸ் துணியில் காபி பொடி மற்றும் தண்ணீர் பயன்படுத்தி இயற்கை முறையில் 9 நாட்களில் 90 மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்து முடித்துள்ளார். மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த ஓவியத்தை சமீபத்தில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தினார் ஸ்ரீராஜ்.
எலிசபெத் ராணி கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரது ஓவியத்தை வரைந்ததாகாக் கூறுகிறார் ஸ்ரீராஜ்.
செய்தியாளர் - ச. மகேஷ்
தயாரிப்பு - நந்தினி வெள்ளைச்சாமி
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)