You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிராவில் 5 மாத இடைவெளியில் தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக மாறியது எப்படி?
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா இணைந்த மஹாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. 5 மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற காங்கிரஸ் தலைமையிலான மஹா விகாஸ் அகாடி கூட்டணி இம்முறை பின்னடைவை சந்தித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட இந்த 5 மாத காலத்தில் பாஜக மாபெரும் வெற்றி பெறும் அளவுக்கு சூழல் மாறியது எப்படி?
ஏக்நாத் ஷின்டே தலைமையிலான மகாயுதி அரசின் உத்திதான் இதற்குக் காரணம் என்கிறார் மும்பையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சமர் கதாஸ்(Samar Kadas). மகளிருக்கு உதவித் தொகை வழங்கும் லாட்லி பெஹின் யோஜனா(Ladli Bahin Yojana), இந்துத்துவா, அனைத்து சாதிகளையும் ஒன்றிணைக்கும் உத்தி ஆகியவை பாஜகவுக்கு வெற்றியை பெற்று தந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
’ மக்களவைத் தேர்தலின் போது, இங்கு மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னை நடந்து கொண்டிருந்தது. இதுபோக, சில பாஜக தலைவர்கள் அரசமைப்பை மாற்றுவது குறித்து பேசினார்கள். இது பௌத்த மற்றும் தலீத் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 10ல் 9 சதவீத பௌத்தர்களின் வாக்கு காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடிக்கு சென்றது. இதனுடன், மராத்தியர்கள், தலித்கள், இஸ்லாமியர்கள் வாக்கும் அவர்களுக்கு கிடைத்தது’ என்கிறார் சமர் கதாஸ்.
ஆனால் தற்போது சூழல் மாறிவிட்டதாக கூறும் அவர், ‘ இஸ்லாமியர் குறைவாகவே வாக்களித்துள்ளனர். அரசமைப்பு விவகாரத்தை பாஜகவினர் திறமையாக கையாண்டதால் தலித் வாக்குகள் அவர்களுக்கு கிடைத்துள்ளன. இடஒதுக்கீட்டில் துணை பிரிவுகள் உருவாக்கப்பட்டதால் பௌத்தர்களின் வாக்குகளும் பாஜகவுக்கு சென்றுள்ளது’ என தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் செய்த தவறுகளில் இருந்து பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பாடம் கற்றுக்கொண்டதாக கூறுகிறார் பிபிசி மராத்தி சேவையின் ஆசிரியர் அபிஜித் காம்ப்ளே.
‘ஓபிசி வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக கொண்டுவர மகாயுதி கூட்டணி முயற்சித்தது. வெங்காய ஏற்றுமதி தடையால் ஆத்திரத்தில் இருந்த வடக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளை சாந்தப்படுத்தும் விதமாக கொள்கைகள் கொண்டுவரப்பட்டன’ என்று அவர் கூறுகிறார்.
பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக லாட்லி பெஹின் யோஜனா கூறப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள் உள்ள 21 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் இணையலாம். ஏராளமான பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
மூத்த ஊடகவியலாளர் ஜித்தேந்திர தீக்ஷித் பிபிசியிடம் பேசும்போது, ‘மகாவிகாஸ் ஆகாடி ஆட்சியமைக்கும் என இரண்டரை மாதங்களுக்கு முன்பு நான் கூறியிருக்கலாம். ஆனால், இந்த காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. லாட்லி பெஹின் யோஜனா உள்ளிட்ட பிற அரசாங்க திட்டங்கள் Game changer ஆக இருந்தன. அதன் தாக்கம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புற குடிசை பகுதிகளிலும் தெளிவாக தெரிந்தது' என்று கூறுகிறார்.
காங்கிரஸ் இம்முறை 101 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், அதில் கால்வாசிக்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.
மகாவிகாஸ் அகாடியின் தோல்வி ஏன்?
இது குறித்து சமார் கதாஸ் கூறும்போது, ‘ மகாவிகாஸ் அகாடியில் உள்ள கட்சிகள் இணைந்து பணியாற்றவில்லை. தங்களுக்கு பெரிய வாக்கு வங்கி இருப்பதாக காங்கிரஸ் தவறாக கருதிக்கொண்டது. இதனால், காங்கிரஸ் - உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா இடையே சிக்கல் நிலவியது. மேலும், பிரதான பிரச்னைகளை விட்டுவிட்டு அதானி, தாராவி, பண வீக்கம் என பிற பிரச்னைகளிலேயே ராகுல் காந்தி முனைப்பு காட்டினார்’ என குறிப்பிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு இருந்த அனுதாப அலை தற்போது குறைந்துவிட்டதாக கூறுகிறார் மூத்த ஊடகவியலாளரான ஜித்தேந்திர தீக்ஷித்.
பாஜகக்கு இந்துத்துவா எந்த அளவுக்கு உதவியது?
இது குறித்து சமார் பேசும்போது, ‘ இந்த வெற்றி இந்துத்துவாவிற்கோ பிரதமர் மோதிக்கோ கிடைத்த வெற்றியல்ல, உத்திக்கு கிடைத்த வெற்றி’ என்கிறார்.
மேலும், ‘ தேர்தல்கள் வியூகத்தின் அடிப்படையிலேயே எதிர்கொள்ளப்படுகின்றன. இந்துத்துவா அரசியலை பொருத்தவரை இந்தியாவிலேயே பாஜக மட்டும்தான் அதில் ஈடுபடுகிறது. இதனை எதிர்க்கொள்ள காங்கிரஸிடம் எந்த உத்தியும் இல்லை’ என்றும் அவர் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.