காணொளி: தென்காசி விபத்து - பேருந்தின் அதிவேகத்தால் உயிர்கள் பறிபோனதா?

காணொளி: தென்காசி விபத்து - பேருந்தின் அதிவேகத்தால் உயிர்கள் பறிபோனதா?

தென்காசி மாவட்டத்தில் இரு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து தென்காசி மாவட்டம், திருமலைக்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இதேபோல், தென்காசியில் இருந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.

மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமியாபுரம் கிராமத்தில் இந்த 2 பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மாலை 7 மணி நிலவரப்படி 7 பேர் உயிரிழந்திருப்பதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பிபிசியிடம் தெரிவித்தார். 60க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 6 பேர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக இலத்தூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

அதிவேகத்தில் வந்த பேருந்து திடீரென எதிர் திசையில் வந்த மற்றொரு பேருந்தில் மோதியதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விபத்து தொடர்பாக பேருந்தின் உரிமத்தை ரத்து செய்திருப்பதாக தெரிவித்த அவர், தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார். அதன்படி,

உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து காரணமாக மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்துகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், அந்த வழியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு