You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’எந்த வயதிலும் எதுவும் சாத்தியம்’ - புடவை அணிந்து ஸ்கேட்டிங் செய்யும் பெண்
கனடாவின் டொரண்டோ நகரில் புடவை அணிந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்யும் ஊர்பி ராயின் கதை இது. அவர் ஏன் புடவை அணிந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்கிறார்?
என் பெயர் ஊர்பி ராய். ஆன்டி ஸ்கேட்ஸ் (Auntie skates) என்றும் என்னை அழைப்பார்கள். 43 வயதில் நான் ஸ்கேட்டிங் செய்ய ஆரம்பித்தேன்.
இது ரொம்ப தாமதம் என நினைத்தேன். கீழே விழுந்து அடிபடும், மற்றவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள் என நினைத்தேன்.
என் குழந்தைகளும் கணவரும் ஸ்கேட்டிங் செய்வதை வெறுமனே வேடிக்கை பார்க்க நான் விரும்பவில்லை.
ஸ்கேட்டிங் போர்டில் ஏறியதுமே, எனக்கு அது பிடித்துவிட்டது. ஸ்கேட் போர்டில் நிற்பதே சுதந்திரமாக இருந்தது.
கொரோனா காலகட்டத்தில் நான் புடவையில் ஸ்கேட்டிங் செய்ய ஆரம்பித்தேன்.
அதேசமயம், குழந்தைகளுடன் பொழுதுபோக்காக நேரத்தை செலவிடுவதற்கும் முயற்சிக்கிறேன். அவர்களிடம், புடவையில் ஸ்கேட்டிங் செய்யப் போகிறேன், என்ன நடக்கிறது என பார்ப்போம் என கூறினேன். என் மகள் அப்போது உடன் இருந்தார். நான் ஸ்கேட்டிங் செய்ததை அவள் வீடியோ எடுத்தாள்.
நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். தெற்காசியாவை சேர்ந்த 40 வயதான தாய், புடவையில் ஸ்கேட்டிங் செய்வது, எல்லோராலும் எதுவேண்டுமானாலும் முடியும் என்பதற்கு உதாரணம்.
புடவை என்பது, உங்கள் உடலை சுற்றி கட்டிக்கொள்ளும் ஓர் ஆடை தான். அதில் உங்களை நன்றாக காட்டிக்கொள்ள முடியும்.
புடவையில் ஸ்கேட்டிங் செய்வது, சில கலாசார விதிமுறைகளையும் மக்களின் பொதுபுத்தியில் இருப்பதையும் உடைக்கும் விஷயம். டிக்டாக்கில் நான்கு மாதங்களிலேயே என்னை லட்சக்கணக்கானோர் ஃபாலோயர்கள் பின்தொடர்ந்தனர்.
வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது உள்பட பலவற்றை ஸ்கேட்டிங் எனக்கு கற்றுக் கொடுத்தது.
நீங்கள் விழும்போது மீண்டும் எழுவீர்கள். நீங்கள் விழுந்தவுடன் மீண்டும் எழுந்து அதை திரும்பச் செய்வீர்கள்.
‘ஆண்ட்டி`கள் எப்போதும் விஷமத்தனமானவர்கள் என்றுதான் நான் சொல்வேன். உங்களை எடை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை? ஏன் உன் தலைமுடி வெள்ளையாக இருக்கிறது? என்றெல்லாம் கேட்பார்கள். ஆண்ட்டி என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்ற முன்முடிவை மாற்ற விரும்பினேன்.
பெண்கள் குறித்து நான் பல ஆச்சர்யமான விஷயங்கள் குறித்து அறிகிறேன். ஒருவருக்கு நான் ஸ்கேட்டிங் கற்க உதவினேன்.
நான் அவர்களுக்கு உதவி செய்தேன் அல்லது அவர்களின் பயணத்தில் பங்கு வகித்தேன். அது எனக்கு ஒரு பரிசு போன்றது. 20 வயதுகளில் உள்ள இளம்பெண்கள் என்னிடம் வந்து, திருமணம் செய்து, குழந்தைகள் பெற்ற பின்னரும் ஸ்கேட்டிங் செய்ய முடியும் என்று எங்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி என கூறுவார்கள்.
நான் எப்படி இருக்க வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்களோ அதைத்தான் நான் பின்பற்றினேன். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். நான் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். திருமணம், குழந்தைகளுக்கு மத்தியிலும் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்ய முடியும்.
பெண்களால் எதுவும் செய்ய முடியும். ஏதாவது செய்ய வேண்டும் என மனதில் நினைத்துவிட்டால் அதனை நிச்சயம் செய்ய முடியும் என இளம்பெண்களுக்கு நான் கூற விரும்புகிறேன். சமூகம் உங்களை கட்டிப்போட அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ்வதற்கு இப்போதும் தாமதமாகிவிடவில்லை. வெளியே சென்று, உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்யுங்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)