You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நியாயமான உரிமை பறிபோகிறது" - மாநில சுயாட்சி தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியதும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பறித்து வருவதாகவும் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்திடவும் மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாக அறிவித்தார்.
"இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது." என்று கூறினார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், "ஒன்றிய-மாநில அரசுகளின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும் நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து விவகாரங்களையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்; இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்;
மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்; நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;
1971ல் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும் 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சி ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்தக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும். இதன் இடைக்கால அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும்" என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு